வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு புகார் டிஎஸ்பியின் திண்டுக்கல் பங்களாவில் சோதனை: நகைகள், ஆவணங்கள் பறிமுதல்; லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி

திண்டுக்கல்: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக எழுந்த புகாரின்படி, தூத்துக்குடி டிஎஸ்பியின் திண்டுக்கல், தூத்துக்குடி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராம் (51). தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக இவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தூத்துக்குடியில் டிஎஸ்பி ஜெயராம் தங்கியுள்ள வாடகை வீட்டிலும், திண்டுக்கல்லில் உள்ள அவரது சொகுசு பங்களாவிலும் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

திண்டுக்கல், கோவிந்தாபுரம் அசோக் நகர் 2வது தெருவில் உள்ள அவரது சொகுசு பங்களாவில் 10 பேர் குழுவினர் காலை 6.30 மணிக்கு சோதனையை துவக்கினர். டிஎஸ்பி ஜெயராமின் மனைவி மற்றும் குடும்பத்தினரை வெளியே அனுமதிக்கவில்லை. பீரோக்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ஏராளமான தங்க நகைகள் சிக்கியதாக தெரிகிறது. சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன. இந்த சோதனை இரவு வரை நீடித்தது. பின்னர் இந்த ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், டிஎஸ்பி ஜெயராமின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

Related Stories: