தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராமலிங்கம் சுதாகர் நியமனம்

புதுடெல்லி: தேசிய கம்ெபனி சட்ட தீர்ப்பாய தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ராமலிங்கம் சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய பெருநிறுவனங்களுக்கான விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நீதிபதி ராமலிங்கம் சுதாகர் 2018ம் ஆண்டு முதல் இந்தாண்டு பிப்ரவரி வரை, அதாவது பணி ஓய்வு பெறும் வரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றினார். மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக செல்வதற்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பில் இருந்தார். அதற்கு முன்பு, டிசம்பர், 2010ம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் போதே, பல்வேறு முக்கிய நிர்வாக பொறுப்புகளில் இருந்து வந்தார்.

நீதிமன்ற ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்ட போது அக்குழுவின் தலைவராக இருந்தார். ₹300 கோடி செலவில், நீதிமன்ற கட்டிடங்கள், பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்ட முன்மொழிவு, தயாரிப்பு ஆகியவற்றுக்கு காரணமாக இருந்த குழுவில் உறுப்பினராக இடம் பெற்றிருந்தார்.தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத் தலைவர், தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவர் ஆகிய இரு பதவிகளும் சுமார் இரண்டு ஆண்டாக காலியாக இருந்தன.  இத்தீர்ப்பாயம் கம்பெனி சட்டம் மற்றும் வங்கி திவால் சட்டம் ஆகியவற்றின் கீழ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதி வழங்கும் முக்கிய தீர்ப்பாயமாகும். இதற்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ராமலிங்கம் சுதாகர் தற்போது நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், இதுவரை நிலுவையில் இருந்த வழக்குகள், நடைமுறைகள், நடவடிக்கைகள் விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இப்பதவியில் 5 ஆண்டு அல்லது 67 வயது பூர்த்தியாகும் வரை இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: