கொள்ளிடம் அருகே அரசூரில் பூட்டியே கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம்: விரைவில் திறக்க வலியுறுத்தல்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே அரசூரில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடமாக திறக்கப்படாமல் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அரசூரில் புதியதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. கட்டப்பட்டு 1 வருடம் ஆகிறது. இதுவரை அந்த கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அருகாமையில் உள்ள சேவை மைய கட்டிடத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் எதிரே உள்ள பழமையான ஒரு அய்யனார் கோயில் சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் அதனை அப்படியே மரம் செடி கொடிகள் மற்றும் புதர்கள் மூடியுள்ளன. இதில் விஷப் பாம்புகள் மட்டும் விஷப்பூச்சிகள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகிலும்,அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் திறந்த வெளி மலம் கழிக்கும் இடமாகவும் சிலரால் பயன்படுத்தப்பட்டு வருவதால் அந்தப்பகுதி சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரம் குன்றி விளங்குகிறது. ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளதால் அலுவலகத்தில் நடைபெற வேண்டிய கூட்டங்கள் மற்றும் ஊராட்சி சம்பந்தமான நிகழ்வுகள் சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றன. எனவே புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: