மனிதனை ஒழுக்கத்தால் மட்டுமே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என முழங்கியவர் முத்துராமலிங்க தேவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: மனிதர்கள் ஒழுக்கத்தில் மட்டுமே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என முழங்கியவர் முத்துராமலிங்க தேவர் என அவரது 114 வது பிறந்த தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே என் தேசத்துக்காகவே தவிர எனக்காக அல்ல என்று வாழ்ந்தவர் பசும்பொன் தேவர் திருமகனார். தனது தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் அவர். மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாதை கொடுக்க வேண்டுமே தவிர, சாதியால் அல்ல என்று சாதி ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார்.

அனைவருக்குமான தலைவர் அவர். பக்குவப்பட்ட ஒருவன், இந்து கோயிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும், கிறித்துவ வளாகத்தில் வைக்கிற மெழுகுவத்தி ஒளியையும், முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் உடலின் இருட்டை போக்க  எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் வடிவமாக காண்பான் என்று சொன்ன மதநல்லிணக்க மாமனிதர். தனியாக இருக்கும்போது சிந்தனை செய்வதில் கவனம் செலுத்துங்கள். கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள் என்று சொன்ன தத்துவஞானி.

நேரம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும் தீரமும், அதேநேரத்தில் எறும்பு கடிக்கும்போது கோபம் வராமல் வருடி கொடுக்கும் பொறுமை குணமும் அரசுக்கு அமைந்திருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு இலக்கணம் வகுத்த அரசியல் மேதை. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முன்மொழிந்த இந்த முத்துமொழிகளை பின்பற்றி நடப்பதுதான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.

Related Stories: