அணைக்கட்டு மோர்தானா கால்வாயில் அடைப்பு உபரி நீர் வெளியேறி 10 ஏக்கர் செடிகள் சேதம்

*கிராமமக்கள் சாலை மறியல்

*பொய்கை- மோட்டூரில் பரபரப்பு

அணைக்கட்டு :  மோர்தானா கால்வாயில் அடைப்பு ஏற்படுத்தியதால் உபரி நீர் வெளியேறி 10 ஏக்கரில் செடிகள் மூழ்கியது. இதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பொய்கை- மோட்டூரில் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் பெய்த கனமழையால் மோர்தானா கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில் சில ஏரிகள் இதுவரை நிரம்பவில்லை. அவ்வாறு கால்வாயில் செல்லும் நீரை தங்கள் பகுதியில் நீர் நிரம்பாத ஏரிகள், குட்டைகளுக்கு கிராமமக்கள் திருப்பி தண்ணீரை நிரப்பி வருகின்றனர்.

 அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பொய்கை கிராமத்தில் இருந்து அன்பூன்டி வரை செல்லும் மோர்தானா கால்வாயில் தடுப்புகளை ஏற்படுத்தி சத்தியமங்கலம் கிராமத்தில் உள்ள பாலக்குட்டைக்கு தண்ணீர் திருப்பி உள்ளனர். ேமடான பகுதியாக இருப்பதால் தண்ணீர் செல்ல வழியின்றி நாட்டமங்கலம் ஏரி  கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொய்கை, மோட்டூர் கிராமத்தில் கால்வாய் ஒட்டியிருந்த வீடுகள், கத்தரிக்காய் செடி, தக்காளி செடி, வெண்டைக்காய் செடிகள்,  துவரை செடிகள் உள்பட 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த செடிகள் நீரில் மூழ்கி சேதமானது.  

தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கபட்ட கிராம மக்கள் மோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், பொய்கை ஊராட்சி வார்டு உறுப்பினர் முருகேசன் தாசில்தார் பழனி, விஏஓ முனிரத்னம், விரிஞ்சிபுரம் போலீசார்  ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  

இதைத்தொடர்ந்து, ஜேசிபி வரவழைத்து மோர்தானா கால்வாயில் இருந்த அடைப்புகளை அகற்றினர். மேலும் நாட்டமங்கலம் கால்வாயில் தண்ணீர் குறைவான அளவுக்கு செல்லும் விதமாக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தனர். இதையடுத்து கால்வாய்களில் தண்ணீர் சீராக சென்றது. வீடுகள், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால்  பரபரப்பு காணப்பட்டது.

மோர்தானா கால்வாய்களை உடைப்பது, தண்ணீரை செல்லவிடாமல் அடைப்புகளை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் குடிபோதை நபர்கள், மர்மநபர்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: