ஆவடி மாநகராட்சியில் பருவமழை தடுப்பு நடவடிக்கைகள்: அமைச்சர் நாசர் ஆய்வு

ஆவடி: வட கிழக்கு பருவமழை முன்னிட்டு, ஆவடி மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை முன்னிட்டு ஆவடி மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது, அவர் மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்துள்ள 3000 மணல் மூட்டைகள், 17 தண்ணீர் இறைக்கும் மோட்டார்கள், 18 ஜெனரேட்டர்கள், 8 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 10 பொக்லைன் இயந்திரங்கள், 15 டார்ச் லைட்டுகள், கவச உடைகள், கயிறு உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டார்.  

மேலும், பருவமழையின் போது தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க இடங்கள், உணவு உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்து கொள்ளவும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், சுகாதார பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சிவகுமார், பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர் சத்தியசீலன், சுகாதார அலுவலர் ஜாபர், நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், நகரமைப்பு ஆய்வாளர் தினகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>