கொடநாடு கொலை வழக்கில் கைதான ஜெயலலிதா கார் டிரைவர் அண்ணனை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

ஊட்டி:  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான, சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது. தொடர்ந்து சாட்சியங்களை கலைத்தது, தடயங்களை அழித்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தற்போது கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கோரி, மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபாவிடம் குன்னூர் டிஎஸ்பி சுரேஷ் மனு செய்தார். அதன்படி தனபாலை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கூடலூர் கிளை சிறையில் இருந்து தனபாலை ஊட்டிக்கு நேற்று மாலை அழைத்து வந்து நீதிபதி சஞ்சய் பாபா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி தனபாலிடம் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டார். ஆனால் நீதிபதி 5 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, தனிப்படை போலீசார் தனபாலை அழைத்து சென்றனர். ரமேஷை நேற்று போலீசார் காவலில் எடுக்கவில்லை. கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கனகராஜ் தனது அண்ணனிடம் தகவல் தெரிவித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தனபாலை முதலில் காவலில் எடுத்து விசாரிப்பதாக தெரியவந்துள்ளது.

Related Stories: