சுவாதி கொலை வழக்கில் சிறையில் இருந்த ராம்குமார் இறந்தது குறித்து உடற்கூறாய்வு செய்த மருத்துவரிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை..!!

சென்னை: சுவாதி கொலை வழக்கில் சிறையில் இருந்த ராம்குமார் இறந்தது தொடர்பாக சந்தேகம் எழுந்திருக்கும் நிலையில் உடற்கூறாய்வு செய்த மருத்துவரிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 2016ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் பட்டப்பகலில் கொல்லப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் கைதான ராம்குமார் என்பவர், புழல் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறையினர் தெரிவித்திருந்தார்கள். எனினும் ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி அவரது தந்தை பரமசிவம், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதேபோல் மாநில மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கு விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த வழக்கு விசாரணைக்காக ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறையில் அப்போது பணியாற்றிய அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகினர். ஆனால் ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை என்று மருத்துவ குழுவினர் அறிக்கை அளித்திருப்பதாக ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். அது தொடர்பான ஆவணங்களும் வெளியானது. இந்த நிலையில், ராம்குமார் உடலை உடற்கூறாய்வு செய்த குழுவின் மருத்துவர் செல்வகுமார் விசாரணைக்காக மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் ராம்குமார் இறப்பு குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

Related Stories: