‘என்னை பிடிக்கிறாயா? குத்தி கொன்று விடுவேன்...’ போலீஸ்காரரை தாக்கி ஜீப் கண்ணாடி உடைத்த வாலிபர்: வீடியோ வைரல்

கோவை: கோவையில் போலீஸ்காரரை தாக்கி ஜீப் கண்ணாடியை உடைத்த வாலிபர் சிக்கினார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரம் ஜி.எச். காலனியை சேர்ந்தவர் தீபக் (28). பெயின்டரான இவர் மது, கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்தார். அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 19ம் தேதி இவர் தான் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து போட்டு நிர்வாணமாக ரோட்டில் நின்று தகராறு செய்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து போலீசார் ஜீப்பில் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் தீபக், ‘‘உங்க வேலைய பாத்துட்டு போங்க... இங்க வந்தா குத்தி கொன்று விடுவேன்’’ என எச்சரித்தார். போலீஸ்காரர் சூர்யகுமாரும், இன்னொரு போலீஸ்காரரும் தீபக்கை பிடித்து அவரை ஆடை அணிய வைத்தனர். கோபமடைந்த தீபக், ‘‘என்னை பிடிச்சிட்டீங்களா?, இப்ப வாங்க பார்க்கலாம்’’ என கூறி வீட்டில் இருந்த கூர்மையான கம்பியை எடுத்து வந்து போலீஸ்காரர்களை மிரட்டினார். போலீசார் லத்தியை காட்டி எச்சரித்தனர். கோபமடைந்த தீபக், ஜீப் கண்ணாடிகளை ஆவேசமாக தாக்கினார். போலீஸ்காரர் சூர்யகுமாரை விரட்டி சென்று கம்பியால் முதுகு மற்றும் கையில் குத்தினார்.

மேலும் அவர் லத்தியை பிடிங்கி ஜீப் கண்ணாடிகளை உடைக்க முயன்றார். போலீஸ்காரரையும் தாக்கினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீபக்கை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் தென்றல் மனநோயாளிகள் மீட்பு அமைப்பினரை வரவழைத்து ஒப்படைத்தனர். அவர்கள் தீபக்கை கோவை அரசு மருத்துவமனை மன நோயாளிகள் பிரிவில் சேர்த்தனர். இந்த சம்பவத்தை அங்கு ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘மன நோயாளியாக இருப்பதால் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. காயமடைந்த போலீஸ்காரர் நலமாக இருக்கிறார்’’ என்றனர்.

Related Stories:

More
>