தென்னேரி ஏரி கரைகளை பாதுகாப்பதில் சுணக்கம் பாதியில் நிறுத்தப்பட்ட தடுப்பு சுவர் அமைக்கும் பணி: பருவமழை தொடங்கினால் பெரும் விபத்து அபாயம்

வாலாஜாபாத்: தென்னேரி ஏரியின் கரைகளை பலப்படுத்துவதற்காக தடுப்பு சுவர் அமைக்கும் பணி மந்தகதியில் நடந்து வருகிறது. தற்போது பருவ மழை தொடங்கினால் பெரும் விபத்து அபாயம் ஏற்படும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் தென்னேரியும் ஒன்றாக உள்ளது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 18 அடி. இந்த ஏரியின் மூலம், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 5,800 ஏக்கர் விளை நிலங்கள் நீர்பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், ஏரியில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது, 15 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில், பருவமழை தொடங்கினால், ஏரியில் தண்ணீர் நிரம்பி, உபரிநீர் வெளியேறும் நிலை உள்ளது. பருவமழையின்போது பென்னேரிக்கரை, வையாவூர், ஏனாத்தூர், ஊத்துக்காடு, புத்தகரம் உள்பட பல்வேறு ஏரிகளில் தண்ணீர் நிரம்பி, தென்னேரியில் வந்து சேர்கிறது. ஏரியில் தண்ணீர் நிரம்புவதையொட்டி, நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்து  உள்ளது.

இதனால், விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், ஏரியில் உள்ள நீர் அதிகளவில் வெளியேறினால், விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது என அச்சத்தில் உள்ளனர். இந்த தடுப்பு சுவர்கள் கட்டும் பணி தற்போது மந்த கதியில் நடக்கிறது. தற்போது ஏரியில் தண்ணீர் நிரம்பி வரும் நிலையில், வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்பே நெடுஞ்சாலை துறையினர், ஏரி கரைகளை பலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தென்னேரி ஏரி மூலம்,  விவசாயிகள் 3 போகம் நெல் விவசாயம் செய்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியில், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் 4 வழிச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, ஏரியின் கரைகளை பலப்படுத்துவதற்காக, நெடுஞ்சாலைத்துறையினர்  தடுப்பு சுவர்கள் அமைக்க தொடங்கினர். ஆனால், கடந்த ஒரு ஆண்டுக்கு முன், அந்த பணி திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது, பருவமழை தொங்கினால், பல்வேறு சிரமங்கள் மக்களுக்கு ஏற்படும் என்பதால், கலெக்டர் ஆர்த்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, பணியை விரைவில் தொடங்கி முடிக்கும்படி உத்தரவிட்டார். ஆனால், அவரது உத்தரவையும், அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர் என்றனர்.

Related Stories: