சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவர் தான் ஓ.பி.எஸ்.!: சசிகலாவுக்கு எதிரான தீர்மானத்திலும் கையெழுத்திட்டுள்ளார்..ஜெயக்குமார் பேட்டி..!!

சென்னை: சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவர் ஓ.பி.எஸ். என்றும் சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களிடம் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்ற தீர்மானத்தில் அவர் கையெழுத்தும் போட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூடி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்ற ஓ.பி.எஸ். கருத்துக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கக்கூடாது என்று ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அந்த தீர்மானத்தில் ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சியின் தலைமை நிர்வாகிகள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். சசிகலா உடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். சூரியன் திசைமாறி உதித்தாலும் தான் சசிகலாவுடன் இணைந்து செயல்படமாட்டேன் என்று ஜெயக்குமார் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடையே பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ஓ.பி.எஸ். கூறியுள்ள நிலையில், அவரது பேச்சுக்கு எதிராக மூத்த தலைவர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இதனால் சசிகலா அரசியல் பிரவேசம் அதிமுகவில் பெரும் புழலை கிளப்பும் சூழல் உருவாகியிருக்கிறது.

Related Stories:

More
>