பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை அரும்பாவூர் மரச்சிற்பத்திற்கு புவிசார் குறியீடு-முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கீகார சான்றை வழங்கினார்

பெரம்பலூர் : அரும்பாவூர் மரச்சிற்பத்திற்கு புவிசார் குறியீடு பதிவகம் மூலம் பெறப்பட்ட, புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர், தழுதாழை பகுதிகளில் மரச்சிற்பத் தொழில் பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இங்கு மாநில அரசால் அமைத்து தரப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டையில் கடந்த 35 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இங்குள்ள சிற்பிகள் தேர்களை மட்டுமன்றி, தெய்வங்களையும், அழகு பெண்களை மட்டுமன்றி, அலங்கார கதவுகளையும், கலைநயம் மிக்க சிற்பங்களையும் கை வினைப்பொருட்களாக வடிவமைக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு தயாரிக்கப்பட்ட மரச்சிற்பங்கள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடத்தப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள சிற்பிகளில் பலர் மத்திய அரசால் வழங்கப்படும் மாஸ்டர் கிராப்ட் பட்டமும், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியால் வழங்கப்படும் தேர் ஸ்தபதி, தேர் சிற்பி பட்டங்களையும் பெற்றவர்கள். சிலை வாகை, மாவிலிங்கம், கொடுக்காப்பள்ளி, பூவரசு, மாமரம், பர்மா தேக்கு ஆகியவற்றில் சிற்பங்களையும், கோயில் வாகனங்களை அத்தி மரத்திலும், தேர்களை இலுப்பை மரத்திலும், ரதத்தை தேக்கு மரத்திலும் செய்து தருகிறார்கள். 10 செ.மீ முதல் 10அடி உயர சிற்பங்கள் வரையிலும், ஓராயிரம் முதல் ரூ.1 லட்சம் மதிப்பிலான சிற்பங்கள் வரை ஆர்டரின்பேரில் வடிவமைத்து, அரும்பாவூரிலிருந்து அமெரிக்கா வரை ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், அவிநாசி, வடபழனி, ஆவுடையார் கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற கோயில்களின் தேர்களை செய்தவர்கள் இங்குள்ள மரச்சிற்பிகளே.

பாரம்பரியம் மிக்க அரும்பாவூர் மரச்சிற்ப வேலைப்பாடுகளுக்கு, புவிசார் குறியீடு பெறுவதற்காக தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் (பூம்புகார்) சார்பாக, கடந்த 2013ம்ஆண்டு, புவிசார் குறியீட்டு பதிவகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. இதனையொட்டி அரும்பாவூர் மரச் சிற்பத்திற்கு கடந்த 2020 மே மாதம் இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இயங்கி வரும் புவிசார் குறியீடு பதிவகத்தின் பதிவாளர் முறையான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இருந்தும் அதற்கான சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 23ம்தேதி தலைமை செயலகத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் தொடர் முயற்சியால் அரும்பாவூர் மரச்சிற்பம், கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரிஓவியம் , தஞ்சாவூர் நெட்டி வேலை ஆகிய கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவகம் மூலம் பெறப்பட்ட புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பார்வையிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற அரும்பாவூர், தழுதாழை மரச் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இங்குள்ள மரச் சிற்பிகளுக்கு மட்டுமன்றி, மாவட்டத்திற்கே பெரும் புகழையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாம்பழம் வரிசையில்

ஈரோடு மஞ்சள், பத்தமடை பாய், கும்பகோணம் வெற்றிலை, காஞ்சி பட்டு, ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பூட்டு, சேலம் மாம்பழம் இந்த வரிசையில் தற்போது அரும்பாவூர் மரச்சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்ட பாதுகாப்பு

புவிசார் குறியீட்டை பதிவு செய்வதால் அதற்கென சட்டப்பூர்வ பாதுகாப்பு கிடைக்கும். புவிசார் குறியீடு வாங்கப்பட்ட பொருட்களை மற்றவர்கள் தவறாக, போலியாக தயாரித்து விற்பது தடுக்கப்படும். வெளிமாநில, வெளிநாடு ஏற்றுமதிகள் அதிகரிக்கும். சர்வதேச வர்த்தகத்திலும் சட்ட பாதுகாப்பு கிடைக்கும்.

Related Stories: