70 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உடையும் அபாயம்- விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்

விழுப்புரம் :  விழுப்புரம் அடுத்த ஏனாதிமங்கலம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 70 ஆண்டுகள் பழமையான எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு 12 ஆயிரத்து 481 சதுர கி.மீ நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்டுள்ளது. அணைக்கட்டு வலது புறம் கரை பகுதியில் எரளூர் வாய்க்கால், ரெட்டி வாய்க்கால் மற்றும் இடதுபுறம் கரை பகுதியில் ஆழங்கால் வாய்க்கால், மரகதபுரம் வாய்க்கால், கண்டம்பாக்கம் வாய்க்கால் உள்ளது. எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் விழுப்புரம் நகராட்சி குடிநீர் திட்டத்திற்கு போர்வெல் போட்டு, தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. மிகவும், பழமையான இந்த அணைக்கட்டு, தற்போது பலம் இழந்துள்ளது. அணைக்கட்டின் ஷெட்டர் சுவர்கள் விரிசலடைந்து உள்ளது.

அணையின் நீர் தேக்க பகுதியில் உள்ள சிமெண்ட் தரைகள் உடைந்து சேதமடைந்துள்ளது. அணையின் ஷெட்டர்களை தாங்கும் இரும்பு துாண்களும் துருப்பிடித்து அரித்துள்ளது. அணைக்கட்டு கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பிலும், தூர்ந்துபோயும் உள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்று தண்ணீர் கால்வாயின் கடைமடை பகுதிக்கு செல்வது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒருவாரத்திற்கு மேலாக எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் தண்ணீர் கடந்து செல்கின்றன. அணைக்கட்டு பலம் குறைந்து காணப்பட்டதால் மையப் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைக்கட்டு சிமெண்ட் தளத்திற்கு அடிப்பகுதி வழியாக தண்ணீர் வெளியேறின.

தண்ணீர் தேங்காமல் வெளியேறிக்கொண்டு இருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதனால் அணைக்கட்டின் சிமெண்ட் தளங்கள் உடைந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பொதுப்பணித்துறையினர் இடதுபுற மதகுகள் வழியாக தண்ணீரை திருப்பிவிட்டுள்ளனர். தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் இந்த தடுப்பணை முற்றிலும் அடித்து செல்லும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே வரவுள்ள பருவ மழைக்கு முன்பாக அணையை பலப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். வீணாக கடலில் தண்ணீர் கலப்பதை தடுக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி பாசன குடிநீர் வசதிக்காகவும் அணை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என விவசாயிகள்,

பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தடுப்பணைகளை ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு

தடுப்பணை உடைப்பு குறித்து தகவல் அறிந்த ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தடுப்பணையின் உறுதிதன்மை மற்றும் தண்ணீர் செல்லும் இடங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள தடுப்பணைகளை அவ்வப்போது கண்காணித்து பாதுகாத்திடவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நீர் கசிவு பகுதி தற்காலிகமாக சீரமைப்பு

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உடைப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த அணை மிகவும் பழமை வாய்ந்த ஒன்று. தற்போது தொடர் மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கட்டு அமைந்துள்ள பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டு அப்பகுதி வலுவிழந்து கசிவு ஏற்பட்டுள்ளது. தற்போது தண்ணீரை வீணாக்காமல் அணைக்கட்டின் இடதுபுறம் உள்ள ஆழங்கால் மரகதபுரம் பகுதிக்கு மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் பணிகள் முடிவடையும் என்று தெரிவித்தார்.

Related Stories: