மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

வருசநாடு: வருசநாடு நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. கடந்த சில மாதங்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லை. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மூல வைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வருசநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மூல வைகையைாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மூலவைகை ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து தும்மக்குண்டு ஊராட்சி செயலர் சின்னசாமி கூறுகையில், ‘கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பஞ்சம் இருக்காது’ என்றார். இதேபோல் தொடர் மழை காரணமாக மேகமலை மற்றும் சின்னச்சுருளி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Related Stories: