பேராவூரணியில் ரயில்வேகேட் சாலையின் நடுவே மெகா பள்ளம்: கண்டுகொள்ளாத ரயில்வே துறை

பேராவூரணி: பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோயில் எதிரே உள்ள ரயில்வே கேட் அருகில் சாலையின் நடுவில் கடந்த பல மாதங்களாக உள்ள மெகா பள்ளம் மூடப்படாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர். பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் எதிரே உள்ள ரயில்வே கேட் பாதை பேராவூரணி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டாலும், மறியல், பொதுக்கூட்டம், போராட்டங்கள் நடைபெற்றாலும் மாற்றுப்பாதையாக உள்ளது.

மெயின்ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் இந்த பாதையின் வழியாக பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்பட அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்லமுடியும். மேலும் கல்லூரி, தனியார் பள்ளி பேருந்துகள், கட்டுமான பொருட்களுக்கு அதிக எடையுடன் ஜல்லி, சிமென்ட் ஏற்றி செல்லும் லாரிகள், கல்லூரி, பள்ளிகளுக்கு சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

முக்கியமான இந்த சாலையில் ரயில்வே கேட் அருகில் சாலை உள்வாங்கி சிறிய பள்ளமாக இருந்தது. உடனடியாக அதை சரிசெய்யாததால் சாலையின் 15 அடி அகலத்திற்குமேல் மெகா பள்ளமாக உள்ளது. ரயில்வே கேட் அருகில் உள்ளதால் குறிப்பிட்ட தூரம் வரை சாலை பராமரிப்பு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது. இத்தனை பெரிய பள்ளம் ஏற்பட்டு தினசரி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும், மாணவர்களும் அவதிப்பட்டும் ரயில்வே துறை கண்டுகொள்ளவில்லை.

இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வரும் ஆண்கள், பெண்கள் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. தற்போது அடிக்கடி மழை பெய்வதால் சாலை உள்வாங்கிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கிகிடக்கிறது. உடனடியாக ரயில்வே துறை மெகா பள்ளத்தை மூடி சாலையை தரமானதாக செப்பனிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: