போலி ஆவணம் தயாரித்து ரூ.35 லட்சம் இடத்தை அபகரித்த மூவர் கைது

திருவள்ளூர்: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் செண்பகா நகர் பகுதியை சேர்ந்தவர் லலிதா தேவி. வில்லிவாக்கம் விநாயகர் கோயில் தெரு 5வது தெருவை சேர்ந்தவர் பீட்லா சொர்ணலதா (எ) லதா. இவர்கள் திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு ஸ்ரீராமலுபுரம் பகுதியில் 1240 சதுர அடி பரப்புள்ள வீட்டு மனையை வாங்கினர். இதை அவர்கள் முறையாக பத்திரப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு சொந்தமான வீட்டுமனையில் சிலர் பூஜை செய்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அங்கு சென்று கேட்டபோது இது தங்களுக்கு சொந்தமான இடம் என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லலிதா தேவி இது தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகம் சென்று விசாரித்தார்.

அதில் அவரது வீட்டு மனையை ஆள்மாறாட்டம் செய்து சிலர் அபகரித்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.25 லட்சம். உடனடியாக அவர் இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீஸ் எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பி ஜூலியஸ் சீசர், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ஹயாத்செரீப், குப்புசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர் சிவசங்கரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் லலிதா தேவிக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து அபகரித்து விற்பனை செய்த திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பெருமாள்பட்டு கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஏழுமலை(45), நடுகுத்தகை, காந்திநகர் ராமலிங்கம் தெருவை சேர்ந்த புருஷோத்தமன்(51) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், சென்னை பெரம்பூர் முத்துக்குமாரசாமி தெருவை சேர்ந்த மோகன் என்பவருக்கு சொந்தமாக திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பள்ளியரை குப்பம், ஐசிஎப் பகுதியில் 2,400 சதுர அடி கொண்ட வீட்டுமனை உள்ளது. ரூ.10 லட்சம் மதிப்புள்ள இவரது வீட்டு மனையை சிலர் போலி ஆவணம் தயாரித்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். இதை அறிந்த அவர் திருவள்ளூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் மோகனுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாக சென்னை ஜி.கே.எம்.காலனி மா.பொ.சி தெருவை சேர்ந்த பாபு(53) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: