திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழக்கத்துடன் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு-கமிஷனர், ஐஜி, டிஐஜி, எஸ்பி பங்கேற்பு

திருச்சி : கடந்த 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணமடைந்த காவலர்வளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு சின்னத்தில் காவலர் வீரவணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை நாடு முழுவதும் பணியின் போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநகர கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், திருச்சி மாவட்ட எஸ்பி மூர்த்தி மற்றும் போலீசார் பங்கேற்று காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். முன்னதாக இறந்த காவலவர்களை நினைவு கூர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் வீரவணக்க நாளை முன்னிட்டு அதிகாரிகள் முதல் போலீசார் வரை கையில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர்.

Related Stories: