வீரவணக்க நாளையொட்டி பணியின்போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி-திருவண்ணாமலை எஸ்பி மலர் வளையம் வைத்து மரியாதை

திருவண்ணாமலை : வீரவணக்க நாளையொட்டி பணியின்போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு திருவண்ணாமலை எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் எஸ்பி அ.பவன்குமார் தலைமையில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21ம் தேதி காவல் துறை சார்பில் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்தியா முழுவதும் காவல்துறையில் பணியில் இருந்த போது உயர் அதிகாரி முதல் காவலர்கள் வரை வீர மரணம் அடைந்த போலீசாருக்கு நேற்று நாடு முழுவதும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அலங்கரித்து வைத்திருந்த நினைவு தூணுக்கு எஸ்பி அ.பவன்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி எஸ்.ராஜகாளிஸ்வரன், மாவட்ட குற்ற ஆவன காப்பக ஏடிஎஸ்பி எஸ்.வெள்ளைத்துைர மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய 40 ஆயுதப்படை போலீசார்  வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டு 120 குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தினர்.

Related Stories: