குற்றாலத்தில் ஒரு வாரமாக முகாமிட்டிருந்த யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

தென்காசி : குற்றாலத்தில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வந்த யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் வனப்பகுதிக்குள்  விரட்டினர்.குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து 3 யானைகள் அடங்கிய கூட்டம், கடந்த ஒரு வார காலமாக மலையடிவார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் முகாமிட்டு தென்னை, வாழை, மா, பலா உள்ளிட்ட பயிர்களை  சேதப்படுத்தி வந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர்,  யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். எனினும் நேற்று முன்தினம்  மீண்டும் யானைகள், கரடி அருவி வழியாக வெண்ணமடை, மவுனகுரு சாமி மடத்தின்  தோப்பு, டிஆர் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து அங்குள்ள மரங்களை  சேதப்படுத்தியது. குறிப்பாக தென்னை மரங்களை வேருடன் சாய்த்து  அவற்றிலிருந்த குருத்துகளை சாப்பிட்டுவிட்டு சென்றது.

இதுகுறித்து தகவலறிந்ததும் மாவட்ட வன அலுவலர் முருகன் அறிவுறுத்தலின் பெயரில் குற்றாலம்  வனவர் பிரகாஷ் தலைமையிலான வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், டமாரம் அடித்தும், டயரில் தீ கொளுத்தியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். தற்போது யானைகள் கூட்டம், செண்பகாதேவி வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. அந்தப் பகுதியில்  உள்ள பாக்கு மரங்களை நேற்று யானைகள் சேதப்படுத்தி உள்ளதை வனத்துறையினர்  பார்வையிட்டனர்.

பின்னர் குற்றாலம் வனவர் பிரகாஷ் கூறுகையில்,  உருவத்தில் பெரிய ஒரு யானை, நடுத்தர உருவத்தில் ஒரு யானை, குட்டி யானை ஆகிய  மூன்று யானைகள் கூட்டமாக சுற்றி திரிகிறது. அவற்றை வனப்பகுதிக்குள்  விரட்டி விட்டாலும் மீண்டும் அடிவார பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள்  வந்துவிடுகிறது. இந்த முறை வனப்பகுதியின் உள்ளே அதாவது செண்பகாதேவி  அருவி பகுதிவரை விரட்டி இருக்கிறோம்.  

மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பெயரில் வனத்துறையினர் அடங்கிய  சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) பகல் முழுவதும் யானைகள்  அடிவாரப் பகுதிகளில் தென்படவில்லை. பவுர்ணமி நேரமாக இருப்பதால் சிலர்  செண்பகாதேவி அம்மன் கோயிலுக்கு செல்கின்றனர். அவர்களிடம் யானை குறித்து  எச்சரித்து அனுப்புகிறோம். அவ்வாறு செல்லும் பக்தர்கள் மாலை 3 மணியுடன்  கீழே இறங்கி விட்டால் யானை உள்ளிட்ட விலங்குகளின் தாக்குதல்  அபாயத்திலிருந்து தப்பிக்க இயலும். பெரும்பாலும் யானைகள் தங்களுக்கு  பிடித்தமான மா, பலா, வாழை, தென்னை குருத்து உள்ளிட்ட உணவு வகைகளுக்காகத்தான் விளை நிலங்களுக்குள் வருகிறது, என்றார்.

Related Stories:

More
>