டீசல் விலை 100ஐ தாண்டியதால் 2 லட்சம் லாரிகள் நிறுத்தம்: உரிமையாளர்கள் வேதனை

சேலம்: சேலம் உள்பட 27 மாவட்டங்களில் டீசல் லிட்டர் 100 ரூபாயை தாண்டியது. டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகம் முழுவதும் 2 லட்சம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில் 4 லட்சத்து 65 ஆயிரம் லாரிகள் இயங்கி வருகிறது. கடந்த பிப்ரவரியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயர்ந்து, தற்போது பெட்ரோல் லிட்டர் 103க்கும், டீசல் சேலம் உள்பட 27 மாவட்டங்களில் 100 ரூபாயையும் தாண்டியுள்ளது. இந்த நிலையில் டீசல், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகளின் விலை உயர்வால் பல உரிமையாளர்கள் லாரிகளை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் கூறியதாவது:சமீப காலமாக லாரி தொழில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா 2வது அலை பரவியது. இதனால் லாரிகள் இயக்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் டீசல் விலை படிப்படியாக உயர்ந்து, தற்போது பல மாவட்டங்களில் லிட்டர் 100ஐ தாண்டியுள்ளது. ஒரு செட் டயரின் விலை ஆயிரம் அதிகரித்துள்ளது. இன்சூரன்ஸ் பத்து சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு லாரியை எப்.சி. செய்ய 1 லட்சத்து 50 ஆயிரமாகிறது. லாரிகளின் உதிரிபாகங்கள், பெயிண்ட் அடிப்பது, ஸ்டிக்கர் ஒட்டுவது, பாடி கட்டுதல் உள்ளிட்டவைகளின் விலையும் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உரிமையாளர்களுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் லாரி தொழிலை சார்ந்துள்ள ஆயில் விற்பனையாளர்கள், வாகன உதிரி பாகங்கள், டயர், பாடி கட்டுதல், ஸ்டிக்கர் ஒட்டுதல் உள்பட பல தொழில்களை சார்ந்த 4 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: