களக்காடு அருகே வன ஊழியர் வீட்டில் புகுந்த மலைபாம்பு மீட்பு

களக்காடு: களக்காடு அருகே கீழ வடகரையைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரேம்குமார் (46). வனத்துறையில் திருக்குறுங்குடி வேட்டை தடுப்புக் காவலராக பணியாற்றி வரும் நிலையில் இவரது வீட்டில் நேற்று 10 அடி நீளமுடைய மலைபாம்பு புகுந்தது. அந்த பாம்பு அவரது வீட்டில் உள்ள கோழிக் கூடுக்குள் நுழைந்து, அங்கிருந்த 3 கோழிகளை பிடித்து விழுங்கியது. கோழிகள் மிரண்டு எழுப்பிய சத்தத்தை கேட்டு வந்த பிரேம்குமார் மலைப்பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இதுபற்றி களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் ரமேஸ்வரன் உத்தரவின் பேரில், வனசரகர் பாலாஜி மேற்பார்வையில் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று வீட்டில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை லாகவமாகப் பிடித்து மீட்டனர். பின்னர் பிடிபட்ட மலைபாம்பை பத்மநேரி பீட், ராவுத்தார் கோயில் சரக வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Related Stories: