ஓமலூர் அருகே பார்சல் லாரியில் தீ: ரூ. பல லட்சம் பொருட்கள் நாசம்

ஓமலூர்: கிருஷ்ணகிரியில் தனியார் கூரியர் நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று அதிகாலை இந்த நிறுவனத்தில் இருந்து பார்சல்களை ஏற்றிக்கொண்டு சேலம், கோவை, கொச்சி ஆகிய பகுதிகளுக்கு டெலிவரி செய்வதற்காக லாரி புறப்பட்டது. லாரியை கர்நாடகாவை சேர்ந்த மாருதி(30) என்பவர் ஓட்டி வந்தார். ஓமலூர் அருகே புளியம்பட்டி மேம்பாலம் அருகே காலை 6.30 மணிக்கு வந்த போது லாரியின் உட்பகுதியில் இருந்து புகை வந்தது. பின்னால் வந்த லாரி டிரைவர் இதைப்பார்த்து பார்சல் லாரி டிரைவர் மாருதியிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து லாரியை சாலையோரம் நிறுத்திய அவர் ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பார்சல் லாரியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  லாரியின் இருந்த பொருட்களை வெளியே இழுத்துப்போட்டு தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இருப்பினும் எலக்ட்ரானிக் பொருட்கள், துணிகள், லேப்டாப் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: