புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில் இலங்கை கடற்படைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில் இலங்கை கடற்படைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் சுமார் 450 விசைப்படகுகளும், 3000க்கும் மேற்பட்ட மீனவர்களும் மீன்பிடி தொழிலையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி கோட்டைப்பட்டினத்தில் இருந்து 118 விசைப்படகுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர்.

இந்நிலையில் 17 நாட்டிக்கல் தொலைவில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் உள்ளிட்ட 3 பேர் மீன்பிடித்து கொண்டுள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகின் மீது ரோந்து கப்பலை வைத்து மோதியுள்ளனர். இதனால் மீனவரின் விசைப்படகு நீரில் மூழ்க தொடங்கியது.

இதனையடுத்து 3 மீனவர்களும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். இதனையடுத்து இலங்கை கடற்படையினர் சேவியர், சுகந்தன் ஆகிய 2 மீனவர்களை மீட்டு காங்கேச துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாயமான மீனவர் ராஜ்கிரணை தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு அந்த தேடுதலில் இலங்கை கடற்படையால் மோதப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ராஜ்கிரணின் உடலை இலங்கை கடற்படையினர் மீது தற்போது இலங்கையில் வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் கோட்டைப்பட்டினம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மீனவ மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் இதேபோல் ரோந்து கப்பலை வைத்து மோதி 4 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது மீண்டும் ஒரு மீனவர் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மீனவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ராஜ்கிரணின் தாயார் மற்றும் மனைவியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 தினங்களாக புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் கடைவீதி பகுதியில் உடலை மீட்டு கொண்டுவர வேண்டும், கைது செய்த மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் கிட்டத்தட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்க பிரிதிநிதிகளும், பொதுமக்களும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: