ஆலங்காயத்தில் பதவியேற்று திரும்பியபோது ஒன்றிய கவுன்சிலர்களை காரில் கடத்த முயற்சி: போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு

வாணியம்பாடி: ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவியேற்பில் பங்கேற்று திரும்பிய ஒன்றிய கவுன்சிலர்களை சிலர் காரில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பதவியேற்றபின் வெளியே வந்த ஒன்றிய கவுன்சிலர்களை, ஒரு கோஷ்டியினர் கடத்திச் செல்வதற்காக அவர்களது கார்களில் வலுக்கட்டாயமாக ஏற்ற முயன்றனர்.

இதனால் இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மேலும் சில ஒன்றிய கவுன்சிலர்கள் அமர்ந்திருந்த வாகனம் தாக்கப்பட்டது. இதில் பெண் ஒன்றிய கவுன்சிலர் ஒருவரது மண்டை உடைந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பத்தூர் ஏடிஎஸ்பி சுப்பையா, வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் தலைமையிலான போலீசார், உடனடியாக  அனைவரையும் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனாலும் கைகலப்பு நீடித்ததால், போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒன்றிய கவுன்சிலர்கள் ஒரு ஜீப்பில் ஏறி அங்கிருந்து புறப்பட்டனர்.  நாளை நடைபெற உள்ள துணைத்தலைவருக்கான தேர்தலில் கவுன்சிலர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற நிலைப்பாட்டில் இரு கோஷ்டியினருக்குள் மோதல் ஏற்பட்டு அவர்களில் ஒரு கோஷ்டியினர் கவுன்சிலர்களை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: