திருவண்ணாமலையில் உள்ள நடுகல் கல்வெட்டு சோழர் காலத்தைச் சேர்ந்தது: மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தகவல்

தி.மலை: திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலையில் உள்ள வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் கல்வெட்டு, முதலாம் பராந்தகன் கல்வெட்டு மற்றும் ஒரு வரி கல்வெட்டு ஆகியவை சோழர் காலத்தைச் சேர்ந்தது என திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.

கி.பி.928-ம் ஆண்டில் நடுகல் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. 1,093 ஆண்டுகள் பழமையானது. ஸ்ரீ பராந்தகன் இருமுடி சோழனுக்கும், அவரது மனைவி செம்பியன் மாதேவியாருக்கும் பிறந்தவர் கண்டராதித்த சோழர் என கூறப்பட்டுள்ளது. அண்ணாமலையாருக்கு மதிய உணவு பூஜை படையல் செய்யும், அதே நேரத்தில் 20 காபாலிக துறவிகளுக்கு உணவு கொடுப்பதற்காக, வைச்சபூண்டி என்ற ஊர் முழுவதையும் துறவிகளுக்கு கொடுத்துள்ளார் கண்டராதித்தர் சோழர். காபாலிகளர்களின் குருவான வல்லக்கொன்றை சோமீசுவரர் கங்காளபடாரர் மற்றும் அவரது சீடர்கள் ஆகியோரும் வைச்சப்பூண்டி கிராமத்தில் இருந்து கிடைக்கும் வரி, பொன் மற்றும் நிலங்களை அனுபவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. காபாலிகம், காளாமுகம் ஆகிய சமய பிரிவுகளை சேர்ந்த துறவிகள், திருவண்ணாமலையில் பராந்தகன் காலத்தில் அரசு ஆதரவுடன் சிறப்பாக இருந்துள்ளனர். இந்த இரண்டு சமய பிரிவுகளும், திருவண்ணாமலை பகுதியில் பரவி விளங்கியதை கல்வெட்டு மூலமாக அறியமுடிகிறது. பராந்தக சோழனுக்கு இருமுடி சோழன் என்ற பட்டமும் இருந்துள்ளது தெரியவருகிறது.

சோழர் கால சிற்ப அமைதி கொண்ட நடுகல்லாகும். ஒரு வீரன் தனது வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் வைத்துள்ளார். அவனது தலையில் கரண்ட மகுடமும், காதில் பெரிய குண்டலமும், இடுப்பில் கச்சை ஆடையும் மற்றும் வாள் உறையும் உள்ளன. எதிரியை தாக்க ஓடுவது போல இரண்டு கால்களும் மடக்கிய நிலையில் உள்ளன. மேலும், இரண்டு வரி கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளன. மேலும், கோயில் எதிர் திசையில் உள்ள மற்றொரு சிறிய கல்வெட்டில் ஆண் மற்றும் பெண் உருவங்கள் உள்ளன. அதன் மேல்புறத்தில் காணப்படும் ஒரு வரியில், ஸ்ரீ மாஹேஸ்வர நம்பி என பொறிக்கப்பட்டுள்ளது. இவர் சிவன் பக்தராக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: