கேரளாவை போல் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளம் உத்தரகாண்டில் 35 பேர் பலி: பல இடங்களில் நிலச்சரிவு, சாலைகள் துண்டிப்பு; மீட்புப்பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள்

நைனிடால்: கேரளாவை போல் உத்தரகாண்ட் மாநிலத்திலும் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தாலும், வீடுகள் இடிந்தும் கடந்த 2 நாட்களில் 35 பேர் பலியாகி உள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, முக்கிய சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. கேரளாவில் ‘மினி மேகவெடிப்பு’ ஏற்பட்டதால், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து, வெள்ளம், நிலச்சரிவில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், நேபாளத்தை சேர்ந்த 3 ஊழியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், நைனிடால் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பால் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஏராளமான பொதுமக்கள் சிக்கியுள்ளனர். குமான் பகுதியில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குமான், ராம்நகர் கிராமத்தில் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளத்தால், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து நைனிடால் துண்டிக்கப்பட்டுள்ளது. நைனிடாலை பிற பகுதிகளுடன் இணைக்கும் 3 பிரதான சாலைகளும் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவினால் துண்டிக்கப்பட்டுள்ளது. நைனி ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள நைனி தேவி கோயில் வெள்ளத்தில் மிதக்கிறது. ராம்நகர்- ரானிகட் சாலையில் அமைந்துள்ள விடுதியில் கோசி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளநீர் புகுந்தது. இதனால் 100 பேர் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர்.

உத்தரகாண்டில் இதுவரையில் மழை வெள்ளம், கட்டிடங்கள் இடிந்து 35 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் நேற்று மட்டுமே 30 பேர் உயிர் இழந்தனர். நைனிடால் மாவட்டத்தில் முக்தேஸ்வர் என்ற இடத்தில் சுவர் இடிந்து 5 தொழிலாளர்கள் பலியாகினர். ஹல்த்வானி என்ற இடத்தில் வெள்ளத்தால் ரயில் பாதை சேதமானது. இதனால், ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டதாலும், வெள்ளம் ஓடுவதாலும் போக்குவரத்து பாதித்துள்ளது. குமான் பகுதி அதிகமாக பாதித்துள்ளது. இங்கு பல வீடுகள் இடிந்து, இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக 10 பேரிடர் மீட்பு குழுக்களை ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. விமானப்படை ஹெலிகாப்டர்களும் மீட்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை இம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி விமானம் மூலம் பார்வையிட்டார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘3 ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

சர்தாம் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள் யாத்திரையை தொடர வேண்டாம். இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்,’’ என்றார். இதனிடையே, உத்தரகாண்ட் முதல்வரை தொடர்பு கொண்டு பேசிய குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மழையால் சிக்கி தவிக்கும் சர்தாம் யாத்திரை மேற்கொண்டுள்ள குஜராத் பக்தர்களை மீட்கவும், அவர்களுக்கான உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார். குஜராத்தில் இருந்து 100 பேர் யாத்திரை சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* பிரதமர் உறுதி

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங்குடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். மழை வெள்ள பாதிப்புக்கள், மீட்பு பணிகளை பற்றி கேட்டறிந்தார். மேலும், தேவையான உதவிகளை ஒன்றிய அரசு செய்து தரும் என்றும் உறுதி அளித்தார்.

* வெள்ளத்தில் சிக்கிய யானை

கவுலா நதியில் இருந்து திறந்து விடப்பட்ட திடீர் வெள்ளத்தில் யானை ஒன்று சிக்கியது. சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்த நிலையில், ஒரு மணல் திட்டில் அது சிக்கி, பயத்தில் அங்கும் இங்குமாக ஒடியது.  அதை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பான பாதையில் விரட்டிச் சென்று காட்டுக்குள் விட்டனர். இந்த வீடியோ காட்சி வைரலாகி இருக்கிறது.

Related Stories:

More
>