தமிழர்களிடம் அடிபணிந்த சோமாட்டோ : ஊழியரை பணி நீக்கம் செய்து தமிழில் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியது!!

டெல்லி :இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்றும் அதனை அனைவரும் தெரிந்து வைத்து இருப்பது அவசியம் என பதிலளித்த ஊழியரை தற்போது பணிநீக்கம் செய்து சோமாட்டோ நடவடிக்கை எடுத்துள்ளது.சோமாட்டோவில் ஆர்டர் செய்த உணவு வராததால் விகாஷ் என்ற இளைஞர் அதன் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி உள்ளார். அப்போது மொழி பிரச்சனையால் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்திடம் இது குறித்து கேட்க முடியவில்லை என்று சோமாட்டோ தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்நாட்டில் சோமாட்டோ செயல்படும் பட்சத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்க வேண்டும் என்று விகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சோமாட்டோ நிறுவனமோ இந்தி நமது தேசிய மொழி என்றும் அனைவரும் குறைந்தபட்சம் அதனை தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்றும் பதில் அளித்துள்ளது. இந்த கலந்துரையாடலை விகாஷ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை எதிர்த்து சோமாட்டோ நிறுவனத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. ட்விட்டரில்  #Reject_Zomato, #ZomatoSpeakTamil உட்பட பல ஹாஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது. மேலும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களிடம் சோமாட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்தி தேசிய மொழி அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ்கள் மூலம் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.  

இந்நிலையில்  இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற கூறிய ஊழியரை சோமேட்டோ நிர்வாகம்  பணிநீக்கம் செய்துள்ளது.இதுகுறித்து சோமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரியில் நடத்தைக்கு வருந்துகிறோம்.  வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர் கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளோம் . பணி நீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம்.  மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிர கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.

இந்த வாடிக்கையாளர் சேவை முகவரியின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டை குறிக்கவில்லை.  ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம்.  நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளூர் மயமாக்கி உள்ளோம். எடுத்துக்காட்டாக நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம். மேலும் கோயமுத்தூர் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்டர்/  சர்வீஸ் சென்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.

உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம்.  அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories:

More
>