அபுதாபி: உலக கோப்பை தகுதிச் சுற்று ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்று களமிறங்கிய நெதர்லாந்து 20 ஓவரில் 106 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தொடக்க வீரர் பேட்ரிக் மேக்ஸ்வெல் 51 ரன் (47 பந்து, 7 பவுண்டரி) விளாசினார். கேப்டன் பீட்டர் சீலார் 21, கோலின் ஏக்கர்மேன், லோகன் வான் பீக் தலா 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். நெதர்லாந்து இன்னிங்சில் 5 வீரர்கள் டக் அவுட்டாகியது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து வேகப் பந்துவீச்சாளர் கர்டிஸ் கேம்பர் (22 வயது) 10வது ஓவரில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை வேகம் லசித் மலிங்கா, ஆப்கன் சுழல் ரஷீத்கான் சாதனையை சமன் செய்தார். சர்வதேச டி20 ஆட்டங்களில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய சாதனையை இந்த மூவர் மட்டுமே படைத்துள்ளனர். உள்ளூர் ஆட்டங்களையும் கணக்கில் கொண்டால் கர்டிஸ் இந்த சாதனையை புரியும் 7வது வீரர். அவர் 4 ஓவரில் 26 ரன் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.