நெல்லை மாநகர பகுதியில் சிறு மழைக்கு சின்னா பின்னமான சாலைகள்

நெல்லை: நெல்லையில் பெய்த சிறு மழைக்கு மாநகர பகுதியில் உள்ள பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கி சின்னா பின்னமாக காட்சியளிக்கிறது. இதில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மரண பயத்தில் செல்வதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த பெருமழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகளவு திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரம் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதியிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த சிறு மழைக்கு நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை பஸ்நிலையம் சாலை சகதி காடாக காட்சியளிக்கிறது.

இதுபோல்  கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலக சாலையில் மெகா பள்ளம் உருவாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுக்க மரக்கூண்டுகளை வைத்து வாகன ஓட்டிகளுக்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளது. கொக்கிரகுளத்தில் இருந்து மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா செல்லும் சாலையில் கொக்கிரகுளம் ரைஸ்மில் பகுதி, குறிச்சி, மேலப்பாளையம் மண்டல அலுவலகம், சந்தை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதுபோல் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ் பாலத்தில் சந்திப்பு போலீஸ் நிலையம் பகுதியில் சாலையில் மழை தேங்கி குளம் போல் காணப்படுகிறது.

இதில் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் பயணிக்கும் நிலை காணப்படுகிறது. இதுபோல் நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு சாலைகளில் பழுதடைந்த நிலையில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தட்டுத் தடுமாறி செல்கின்றனர். போர்க்கால அடிப்படையில் பழுதான, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: