மேட்டூர் அருகே நீதிபுரம், சின்னதண்டாவில் இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வரும் ஒற்றை யானை: கிராம மக்கள் பீதி

மேட்டூர்:  சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் வனப்பகுதியில் உள்ள நீதிபுரம், பெரியதண்டா கிராமங்கள். வனப்பகுதியை ஒட்டி உள்ளன. இந்த கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயம். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நீதிபுரம் ஏரியில், காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளியை ஒற்றை ஆண் யானை தாக்கியதில், படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். அவரை தாக்கிய ஒற்றை யானை, தற்போது விளை நிலங்களில் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வருகிறது.

இரவு நேரத்தில் சப்தம் கேட்டு டார்ச் லைட் அடித்தால் பொதுமக்களை யானை விரட்டுகிறது. குடியிருப்புகளில் மின் விளக்கு எரிந்தால், வீட்டிற்கே யானை வருவதாக கிராம மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சுமார் 15 கி.மீ., சுற்றளவில் வாழை, மக்காச்சோளம், சோளம், ராகி, மரவள்ளி கிழங்கு என 100 ஹெக்டேருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்களை நாள்தோறும் ஒற்றை யானை சேதப்படுத்தி வருகிறது. மாலை 6 மணி வரை வனப்பகுதியில் மறைந்திருக்கும் யானை, தோட்டங்களில் புகுந்து பயிர்களை துவம்சம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

விரட்டுவதற்காக செல்பவர்களை, பதிலுக்கு விரட்டுகிறது. இதனால், நீதிபுரம் மற்றும் பெரியதண்டாவில், மாலை 6 மணிக்கே கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு, ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை, மயில்சாமி, செல்வி உத்திரசாமி, சுசீலா, வேலு ஆகியோரது வாழை தோட்டம், பெரியதண்டா செல்வி கோபால், பழனிசாமி ஆகியோரது மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தோட்டத்திற்கு போட்டுள்ள வேலிகளையும் யானை சேதப்படுத்தி வருகிறது. கடந்த 6 மாத காலமாக இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி, உயிர் பயத்தையும் ஏற்படுத்தி வரும் இந்த யானையை, அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும். இவ்வாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: