சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் கிரீன் சர்க்கிள்- சத்துவாச்சாரி இடையே திடீர் போக்குவரத்து நெரிசல்

வேலூர்: வேலூர் கிரீன் சர்க்கிள்- சத்துவாச்சாரி இடையே நேற்று மாலை 5 மணியளவில் ஏற்பட்ட திடீர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் திணறினர். தமிழகத்தில் கடந்த 14ம் தேதி ஆயுத பூஜை தொடங்கி மறுநாள் விஜயதசமியை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாக அமைந்தது. இதனால் கடந்த 13ம் தேதியே சென்னை, கோவை, பெங்களூரு உட்பட வெளியூர்களில் தொழில், பணி நிமித்தமாக தங்கியிருந்தவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்பினர்.

அதேபோல் வெளியூரில் இருந்து வேலூர் மாவட்டத்தில் தங்கியிருந்தவர்களும் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். இந்நிலையில், நேற்றுடன் விடுமுறை நாட்கள் முடிந்த நிலையில் அனைவரும் வழக்கமான பணிகளுக்கு திரும்புவதற்காக வேலூர் பஸ் நிலையத்தில் குவிந்தனர். அதேபோல் கார்கள், பைக்குகள் மூலமும் திரும்பினர். இதனால் வேலூர் கிரீன் சர்க்கிள் தொடங்கி சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் வரையிலான சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆங்காங்கே வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் இருபுற சர்வீஸ் சாலையில் போக்குவரத்தை போலீசார் திருப்பிவிட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

Related Stories:

More
>