குப்பை தொட்டியில் வீசப்பட்ட 100 கிராம் தங்க நாணயம் போலீசில் ஒப்படைப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர், அண்ணாமலை நகர், 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கணேஷ் ரமணன் (37). பெருங்குடியில் உள்ள கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், சில மாதங்களுக்கு முன், 100 கிராம் தங்க நாணயம் ஒன்றை வாங்கியுள்ளார். அதை, வீட்டில் பழைய கண்ணாடி வளையல்கள் போட்டு வைக்கும் கவரில் போட்டு, கட்டிலுக்கு அடியில் வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டை சுத்தம் செய்த இவரது மனைவி ஷோபனா, பயன்படாத கண்ணாடி வளையல் தானே என நினைத்து, தங்க நாணயம் இருந்த கவரை எடுத்து, குப்பை தொட்டியில் போட்டுள்ளார். அந்த குப்பையை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

இதனிடையே, வெளியில் சென்று வீடு திரும்பிய கணேஷ் ரமணன், தங்க நாணயம் வைத்திருந்த  கவரை காணாததால், இதுபற்றி மனைவி ஷோபனாவிடம் கேட்டுள்ளார். அவர், அதை குப்பையில் போட்டு விட்டதாக தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த கணேஷ் ரமணன் இதுகுறித்து சாத்தாங்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார், சம்மந்தப்பட்ட பகுதி மாநகராட்சி துப்புரவு சூபர்வைசரிடம் தெரிவித்தனர். அவர், இதுபற்றி பெண் தூய்மை பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், சம்மந்தப்பட்ட பகுதியில் சேகரித்த குப்பையை தரம் பிரித்தபோது, ஷோபனா குப்பையில் போட்ட தங்க நாணயம் கிடைத்தது. உடனே, அதை சாத்தாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதை பெற்றுக்கொண்ட போலீசார், தூய்மை பணியாளர்களை பாராட்டினர். பின்னர், உரியவரிடம் அந்த தங்க நாணயத்தை ஒப்படைத்தனர்.

Related Stories: