அமைச்சர் கே.என்.நேரு தகவல் நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் துவக்கம்

திருச்சி: நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவக்கி உள்ளோம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி, அதற்கான பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆரம்ப கட்டப்பணிகளை துவக்கி உள்ளோம்.

தேர்தல் ஆணையத்துடன் அமர்ந்து பேசி அதற்கான தேதி முடிவு செய்து விரைவில் தேர்தல் நடத்தப்படும். தேர்தல் ஆணையத்தை கையில் வைத்து கொண்டு தான் திமுக வெற்றி பெற்றதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது என அனைவருக்கும் தெரியும். நாங்களெல்லாம் சிறையில் இருந்தோம். வெற்றி பெற்றவர்களை அடித்து விரட்டிவிட்டு, காவல்துறையை வைத்து எழுதி வாங்கியவர்கள் அவர்கள். அவர்களை போலவே எங்களை நினைத்து அப்படி சொல்கிறார்கள்.

திமுக ஆட்சியில் அதிகாரிகள் மிக நேர்மையாக பணியாற்றி வருகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 வாக்கு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். நேர்மையாக நடந்த காரணத்தால் தான் இவ்வாறு நடந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் மக்கள் ஈர்க்கப்பட்டு திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். ஒரு சில மாற்றங்களை தவிர பெரியளவில் எந்த மாற்றமும் இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்ததை காட்டிலும், தேர்தல் ஆணையம் இப்போது சுத்தமாக உள்ளது என்றார்.

ஒருங்கிணைந்த பஸ் நிலையம் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

மேலும் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், ‘‘திருச்சி காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே உள்ள பழைய பாலம் அருகே ரூ.90 கோடி செலவில் புதிய பாலம் அமைய உள்ளது. திருச்சியை பொறுத்தவரை பல்வேறு வளர்ச்சிப்பணிகள் ஆரம்பகட்ட நிலையில் உள்ளன. திருச்சி ஒருங்கிணைந்த மத்திய பஸ் நிலையம் கட்ட நிர்வாக ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சிஎம்டிஏ மூலம் ரூ.140 கோடி  தரப்பட்டுள்ளது. மார்க்கெட் அமையவும் பணம் வழங்கப்பட்டுள்ளது. விரைவாக அதற்கான பணிகள் நடைபெறும். பஸ் நிலையம் அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவார்’’ என்றார்.

Related Stories: