பணி சுமையால் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி:   கள்ளக்குறிச்சி வெள்ளாளர் தெருவில் வசித்து வருபவர் தேவராஜ் மனைவி தீபா(35). இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 7 மாதத்திற்கு முன், தீபா தற்காலிகமாக வரஞ்சரம் காவல்நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 4 நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி, காவலர் தீபாவை தொடர்பு கொண்டு மகளிர் காவல்நிலையத்திற்கு பணிக்கு வருமாறு அழைத்துள்ளார்.  ஆனால் வரஞ்சரம் காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை.இந்நிலையில் மீண்டும் மகளிர் ஆய்வாளர் மற்றும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமை காவலர் ஒருவர், தீபாவை தொடர்பு கொண்டு மகளிர் காவல்நிலைய பணிக்கு வராவிட்டால் மெமோ தரப்படும் என எச்சரித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த காவலர் தீபா நேற்று வரஞ்சரம் காவல் நிலையத்துக்கு பணிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த காவல்நிலையத்தில் இருந்தபடியே தனது கணவரிடம், தொலைபேசி மூலம் நமது இரண்டு மகன்கள் மற்றும் ஒருமகளை நல்லமுறையில் பார்த்து கொள்ளுங்கள். எனக்கு அதிகாரிகள் பணிசுமை கொடுப்பதால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வருகிறேன் என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளார்.  

பின்னர் பெண் காவலர் ஒருவர், தீபாவின் கணவர் தேவராஜை தொடர்பு கொண்டு தங்களுடைய மனைவி தீபா விஷம் குடித்துவிட்டார். தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் தேவராஜ் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த எஸ்பி ஜியாவுல்ஹக், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி  ஆகியோர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories:

More
>