ஆயுதபூஜை வியாபாரம் அசத்தல் திண்டுக்கல் மார்க்கெட்டில் 60 டன் பூக்கள் விற்பனை

*விலையும் எகிறியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் : ஆயுத பூஜையையொட்டி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சுமார் 60 டன் பூக்கள் விற்பனையாயின. பூக்களின் விலையும் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். திண்டுக்கல்லில் அண்ணா பூ மார்க்கெட் வளாகம் செயல்படுகிறது.

இங்கு திண்டுக்கல்லை சுற்றியுள்ள வெள்ளோடு, பஞ்சம்பட்டி, செம்பட்டி, ஆவரம்பட்டி, பெரியகோட்டை, சாணார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக பூக்கள் விலை குறைந்திருந்த நிலையில் ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் விசேஷ நாட்கள் வருவதையொட்டி திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்களின் விலை நேற்று உச்சத்தை தொட்டது. நேற்று (ஒரு கிலோ அளவில்) மல்லிகை ரூ.500, கனகாம்பரம் ரூ.400, ரோஸ் ரூ.200, கோழிக்கொண்டை ரூ.30, செண்டு மல்லி ரூ.60, சம்பங்கி பூ ரூ.600, ஜாதி முல்லை ரூ.500, அரளி ரூ.400 என விற்பனையானது.

பூக்களின் திடீர் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அண்ணா பூ வணிக வளாக சங்க பொருளாளர் சகாயம் கூறுகையில், ‘‘கடந்த ஆயுதபூஜை காலங்களில் 4 நாட்கள் ெதாடர்ச்சியாக வர்த்தகம் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால் நேற்றே அதிக பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 60 டன் பூக்கள் விற்பனையாயின. இனி விசேஷ காலம் என்பதால் பூக்களின் விலை உயர்ந்தே இருக்கும்’’ என்றார்.

Related Stories: