மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக 40 லட்சம் மோசடி: உதவி பொறியாளர் மீது போலீசில் புகார்

திருவொற்றியூர்: தண்டையார்பேட்டை ரெட்டை குழி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(31), இவருக்கு வடசென்னை அனல்மின் நிலையத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்த பாபு(43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் மின்வாரியத்தில் டெண்டர் எடுத்து தருவதாக கூறி சுரேஷிடம் 42 லட்சம் ரொக்கமாக பாபு பெற்றதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி மார்ச் 2017ல் மின்வாரியத்தில் வேலை வாங்கி உதவி பொறியாளர் பாபுவிடம் 20 லட்சமும், அவரது மனைவி சாந்தியிடம் 20 லட்சமும் ரொக்கமாக சுரேஷ் கொடுத்துள்ளார். ஆனால் டெண்டர் எதுவும் எடுத்து வரவில்லை. வேலையும் வாங்கித் தரவில்லை. பலமுறை கேட்டும் எதுவும் நடக்காததால் தன்னுடைய 40 லட்சத்தை பாபுவிடம் திருப்பி கேட்டுள்ளார். இதையடுத்து பாபு பணத்திற்கு பதிலாக காசோலையை சுரேஷூக்கு கொடுத்துள்ளார். ஆனால் அந்த காசோலை பணமின்றி திரும்பியது. இந்த விவகாரம் குறித்து சுரேஷ் செப்.2019ல் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில், புகார் செய்தார்.  

காவல் நிலையத்தில் சுரேஷிடமிருந்து 40 லட்சம் பெற்றுக்கொண்டதாகவும், அதில் 25 லட்சத்தை முதல் தவணையாக செலுத்துவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் எழுதி கொடுத்த படி பணம் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது தாயுடன் நேற்று காலை எர்ணாவூர் கேட் பகுதியில் உள்ள பாபு குடியிருக்கும் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டார். மேலும், பணத்தை திருப்பி தராவிடில் குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக கோஷமிட்டார். தகவலறிந்த எண்ணுார் போலீசார் சுரேஷை சமாதானம் செய்தனர். பின்னர் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: