ஐநா, உலக வங்கி, ஐஎம்எப் எல்லாத்தையும் மாத்தணும்: அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் பேச்சு

பாஸ்டன்: ‘பல ஆண்டுகளாக பிரச்னைகள் தீர்க்கப்படாத நாடுகளுக்காக வாய் திறக்காமல் இருக்கும் ஐநா, உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற  உலக அமைப்புகளில் உடனடி சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்,’ என அமெரிக்காவில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குரல் கொடுத்துள்ளார். வாஷிங்டனில் நடக்கும் உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருவார பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் பேசியதாவது: நாடுகளில் கூட வெவ்வேறு காலகட்டங்களில் மாற்றங்கள், சீர்த்திருத்தங்கள் நடக்கின்றன. ஆனால், ஐநா, உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற உலக அமைப்புகள் பல்லாண்டு காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரி நீடிக்கின்றன. இத்தகைய அமைப்புகள் அதிக வெளிப்படைத்தன்மையுடன், பிரதிநிதித்துவத்துடன், போதுமான பிரதிநிதிகள் இல்லாத நாடுகளுக்காகவும் பேசக்கூடிய அமைப்புகளாக இருக்க வேண்டியது அவசியம். அத்தகைய மாற்றம் உடனடியாக நடக்க வேண்டும் என்பதே எனது கருத்து. ஆப்ரிக்காவின் பல நாடுகள், பசிபிக் தீவுகளை வளர்ச்சி இன்னமும் சென்றடையவில்லை. அந்தந்த நாடுகளுக்கும் வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகள் நிறைய உள்ளன. எனவே, உலக அமைப்புகளில் உடனடியாக மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

அமர்த்தியா சென்னுக்கு பதிலடி: ஹார்வர்டு பள்ளி நிகழ்ச்சியின் போது, அமைச்சர் நிர்மலாவிடம் கலந்துரையாடியவர், இந்தியாவில் பாஜ ஆட்சியில் சகிப்பின்மை அதிகமாகி இருப்பதாகவும், முஸ்லிம்களை பாஜ அரசு வித்தியாசமாக நடத்துவதாகவும் நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் உள்ளிட்டோர் கவலை தெரிவிப்பது குறித்து கேள்வி கேட்டார். அதற்கு நிர்மலா சீதாராமன், ‘‘பாஜ ஆளாத மாநிலத்தில் நடக்கும் வன்முறைக்கு கூட பிரதமர் மோடியின் வீட்டு கதவுகள்தான் தட்டப்படும். ஏனெனில், அதுதானே கதைக்கு பொருத்தமாக இருக்கும். அமர்த்தியா சென் போன்ற அறிஞர்கள் கூட உண்மை என்ன என்பதை அறியாமல் தங்கள் விருப்பு, வெறுப்பை பிரதானப்படுத்தி பேசுவது கவலை அளிக்கிறது. அவர், எங்கள் நாட்டில் வந்து உண்மை நிலவரம் என்ன என்பதை பார்த்தால் புரியும்,’’ என்றார்.

Related Stories: