ஆயுதபூஜையை முன்னிட்டு கரூரில் பொரி தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

கரூர்: ஆயுதபூஜையை முன்னிட்டு கரூர் நகரப்பகுதிகளில் பொரி தயாரிக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.கரூர் நகரைப் பொறுத்தவரை ஜவுளி, கொசுவலை மற்றும் பஸ்பாடி போன்ற மூன்று முக்கிய தொழில்களை கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான பணியாளர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.ஆண்டுதோறும் ஆயுதபூஜை பண்டிகை மற்ற மாவட்டங்களை காட்டிலும் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படவுள்ள நிலையில், தொழிலாளர்கள், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள் அனைவரும் ஆயுதபூஜை அன்று காலை முதல் இரவு வரை பொறி, கடலை, பழங்கள், பூக்கள் ஆகியவற்றை படைத்து சுவாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதற்காக, கரூர் நகரப்பகுதிகளில் பொரி உற்பத்தி செய்யும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கரூர் நரசிம்மபுரம் பகுதியில் உள்ள பொரிப்பட்டறையில் கடந்த சில நாட்களாக விடிய விடிய பணியாளர்கள் பொரி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்றும், நாளையும் பொரி விற்பனை நகரப்பகுதிகளை சுற்றிலும் நடைபெறவுள்ளது என்பதால் உற்பத்தியில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதே போல், ஆயுதபூஜையை முன்னிட்டு, கரூர் ரயில்வே நிலையம் அருகில் உள்ள பூ மார்க்கெட்டிலும், நேற்று அனைத்து விதமான பூக்களும் வரவழைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. குறிப்பாக செவந்திப்பூக்கள் அதிகளவு பூ மார்க்கெட்டில் நேற்று ஏலம் விடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: