பெட்ரோல் விலையை உயர்த்திதான் இலவச தடுப்பூசி போடுறோம்: ஒன்றிய இணை அமைச்சர் பகீர் பேட்டி

கவுகாத்தி: பெட்ரோல் விலையை உயர்த்திதான் மக்களுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டு வருவதாக, ஒன்றிய இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்தார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டி விட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒன்றிய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலியிடம், ெபட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு குறித்து அசாம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதில், பெட்ரோல் விலை உயர்வு முக்கிய அங்கம் வகிக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதற்கான வரிதான் விதிக்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விதிப்பால்தான், மக்களுக்கு இலவசமாக  கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நீங்கள் இலவச தடுப்பூசி போட்டுக்  கொண்டதற்கு பணம் எங்கிருந்து வரும். நீங்கள் தடுப்பூசிக்கு ஏதேனும் கட்டணம்  செலுத்தினீர்களா? இமயமலை நீரை குடிக்க வேண்டுமானால், ஒரு பாட்டிலின் விலை  ரூ.100.  ‘பேக்கேஜ்’ செய்யப்பட்ட மினரல் வாட்டருடன் ஒப்பிடும் போது,  பெட்ரோல் விலை குறைவுதான்.

தண்ணீரின் விலைதான் அதிகம். எரிபொருள் விலையை  நாங்கள் குறைத்தாலும், மாநில அரசுகள் குறைக்க மறுக்கின்றன. ராஜஸ்தானில்  பெட்ரோல் விலை மிக அதிகமாக உள்ளது. பெட்ரோல் மீது மாநில அரசு அதிகபட்ச வாட்  விதித்துள்ளது. அவர்கள் வரியை குறைக்க முன்வருவதில்லை’ என்றார். ஒன்றிய அமைச்சரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: