பெருஞ்சாணி அணை மறுகால் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் பெய்த கனமழை இரவு சற்று குறைந்தது. இதனால் சிற்றாறு அணை மறுகால் வழியாக திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று காலை நிறுத்தப்பட்டது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 1 அணையில் இன்று நீர்மட்டம் 16 அடியும், சிற்றாறு 2 அணையில் 16.11 அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. இதே போல், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 73.86 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1508 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

பெருஞ்சாணி அணையிலும் நீர்மட்டம் 72 அடியை கடந்ததால் மறுகால் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.44 அடியாக உள்ளது. அணைக்கு 3783 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி 3710 கனஅடி தண்ணீர் மறுகால் ஷட்டர் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் கோதையாற்றில் பாய்ந்து திற்பரப்பு வழியாக செல்கிறது. இதனால் திற்பரப்பு அருவியில் கலங்கிய நிலையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

 

இதே போல் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ேமற்குதொடர்ச்சி மலையான ேகாதையாறு, அடர்ந்து காட்டு பகுதிகளில் கன மழை பெய்வதால் பேச்சிப்பாறைக்கு வரும் சிறுசிறு ஆறுகள், நீரோடைகள் தண்ணீரால் நிரம்பி வருகிறது. கோதையாறு அணையில் இருந்து மறுகால் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பால்வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 3 நாட்களாக கனமழை காரணமாக பால்வெட்டும் தொழில் முற்றிலும் முடங்கி தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சூழியல் சுற்றுலத்தலமான கோதையாறு அருவி, குற்றியாறு, இரட்டை அருவி ஆகியவற்றில் வெள்ளம் அபாய அளவை கடந்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதே போல் கோதையாறு, தாமிரபரணி ஆறுகளில் கரையோரங்களில் வசிப்பவர்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தரைப்பாலம் உடைந்தது

குலசேகரத்தில் இருந்து குற்றியாறு செல்லும் வாகனங்கள் மோதிரமலை அடுத்துள்ள ஆற்று பகுதியை கடந்த செல்ல வேண்டும். இதற்காக ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. மழை காலங்களில் இந்த பாலத்தை நிரம்பி தண்ணீர் செல்லும். மேலும் கோதையாறு மறுகால் திறக்கப்படும்போதும், மின்நிலையங்களில் அதிக தண்ணீர் விடும்போதும் இந்த பாலம் நிரம்பி செல்லும். இதுபோன்ற நாட்களில் வாகனங்கள் செல்லமுடியாது. இதனால் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் இந்த பாலம் மூடப்பட்டு பொதுமக்கள் அவதியடைவர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் இந்த தரைப்பாலம் அடிக்கடி மூழ்கியது. இரு பாக்கமும் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் குறைந்த பின் ஆற்றை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் நேற்றும் அதிக தண்ணீர் வந்ததால் பாலம் மூழ்கியது. இதனால் வாகனங்கள் இரு பக்கமும் நின்றன. இரவு வெகுநேரமான பின்னரும் தண்ணீர் குறையவில்லை. இதனால் அதிகாரிகள் வந்து அங்கு காத்து நின்ற மக்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

இன்று காலை தண்ணீர் சற்று குறைந்தபோது தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் வாகனங்கள் இந்த பாலம் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: