கே.வி.குப்பம் அருகே காவனூரில் ஏரி நீரில் மூழ்கிய சாலையை வாகன ஓட்டிகள் அடையாளம் காண கம்புகள் நட்ட இளைஞர்கள்-குவியும் பொதுமக்களின் பாராட்டு

கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அருகே ஏரிநீரால் தடம் தெரியாமல் போன சாலையை வாகன ஓட்டிகள் அறியும் வகையில் இருபுறமும் கம்புகள் நட்டு, சிமென்ட் பையினை தொங்க விட்டு தடம் அறிய ஏற்பாடு செய்த இளைஞர்களை சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காவனூர் ஏரியையொட்டி மேல்காவனூரில் இருந்து பசுமாத்தூர் செல்ல தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை மேல்காவனூர், சென்னங்குப்பம், பசுமாத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், தொடர்ந்து பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வழிந்த நீர் மேல்காவனூர்-பசுமாத்தூர் தார்சாலையில் தேங்கியது. தார்சாலையின் தடம் தெரியாத அளவுக்கு ஏரிநீர் தார்சாலையை மூடியுள்ளது. இதனையறியாமல் வழக்கம்போல் இரவில் பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் தார்சாலை தடம் தெரியாமல் உள்ளதால் தார்சாலையை ஓட்டி உள்ள பள்ளத்தில் தேங்கியுள்ள நீரில் விழுந்து செல்கின்றனர்.

இதனையறிந்த மேல்காவனூர் பகுதிைய சேர்ந்த இளைஞர்கள் விபத்து ஏற்படுவதை தவிர்க்க தார்சாலைய தடம் தெரியும் வகையில் இருபுறமும் கம்புகள் நட்டு, சிமென்ட் பையினை கொடிகள் கட்டுவது போல் கட்டி வைத்துள்ளனர். தார்சாலையில் ஏரிநீர் நிரம்பி தடம் தெரியாததால் விபத்துக்கள் ஏற்பட்டு வந்துள்ளது. விபத்தினை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் இளைஞர்களின் இந்த நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: