வந்தவாசி அருகே பாழடைந்த கோயிலில் 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

வந்தவாசி : வந்தவாசி அடுத்த தென்னாத்தூர் கிராமத்தில் உள்ள பாழடைந்த சமணர்  கோயிலுக்கு ஊர் மக்கள் தானம் தந்த செய்தியை சொல்லும் 16ம் நூற்றாண்டு கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவுக்கு உட்பட்ட   தென்னாத்தூர் கிராமத்தில் கோயில் ஒன்று மிகவும் சிதிலமடைந்து இருப்பதாக, திருவண்ணாமலை மரபுசார் அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வரலாற்று ஆர்வலர்கள் ராஜ்பன்னீர் செல்வம், உதயராஜா ஆகியோர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் தெரிவித்ததாவது:

சிறிய கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் கூடிய இக்கோயிலில் புதர்கள் மண்டி, மரங்கள் முளைத்து காணப்படுகிறது. இக்கோயில் உள்ளே எந்த சிற்பமும்  கிடைக்கவில்லை. மேற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் தெற்கு பக்க அதிட்டானத்தில் ஆவணம் செய்யப்படாத மூன்று வரி கல்வெட்டு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டை சுத்தம் செய்து பார்க்கையில், இக்கல்வெட்டு 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்பதும்,  இக்கோயில் சமண சமயத்தை சேர்ந்த மகாவீரர் கோயில் என்பதையும் அறிய முடிந்தது.

மேலும், முக்குடை செல்வர் என்று மகாவீரரை குறிப்பிடும் இக்கல்வெட்டு மூலம், தென்னாற்று ஊர் மக்கள், இக்கோயிலுக்கு பல்லவராயர் மனை என்று குறிப்பிடப்படும் இடத்திற்கு கிழக்கே உள்ள மனையையும், ஏந்தல் நிலம் மற்றும் இரண்டு கிணறுகளுக்கு வரி நீக்கி தானம் அளித்த செய்தியை அறிய முடிகிறது. இந்த தானத்துக்கு சாட்சியாக மலைய பெருமாள் ஆடுவார், குருகுலராய ஆடுவார் மற்றும் அப்பாண்டையார் இருப்பதாகவும், சந்திர, சூரியர் உள்ளவரை இந்த தானம் செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கோயிலின் அருகே தலை உடைந்த மகாவீரர் சிலை ஒன்று இருந்ததாகவும், உறை கிணறு ஒன்று இருந்ததாகவும் அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். மேலும், கோயிலின் கட்டுமானம் விஜயநகர காலத்தை சேர்ந்ததாகும். இப்பகுதிகளில் சமணர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துள்ளதை மற்றொரு சமணர் கோயில் மூலம் அறியலாம். மேலும், சுமார் 500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலை சீரமைத்து மீண்டும் வழிபாட்டுக்கு கொண்டு வருவதே முக்குடை செல்வரான மகாவீரருக்கு செலுத்தும் மரியாதையாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: