குன்னூரில் கன மழையால் மண்சரிவு-மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவதால் போக்குவரத்து பாதிப்பு

குன்னூர் :  குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த  கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவ்வப்போது கன மழை பெய்து வருவதால் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.   

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன  மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் நிறைந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதிக  ஈரப்பதம் காரணமாக குன்னூரில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

குன்னூர்  மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியாறு அருகே சாலையில் மரம் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது.  இதே போன்று குன்னூர் அருகே உள்ள பாரத நகர் பகுதியில் கன மழை காரணமாக நடைபாதை இடிந்து வீட்டின் மீது விழுந்தது.  குன்னூரிலிருந்து ராணுவ பகுதிக்கு செல்லும் பாதையான டிடிகே சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் உதவியுடன் மண் சரிவை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விழுந்த மரங்களை  தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர்  பொக்லைன் உதவியுடன் மண் மற்றும் மரங்களை அகற்றினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலச்சரிவுகள் ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட  அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

Related Stories: