கொரோனா அதிகரித்த காலத்தில் ஊரகப்பகுதியில் மாஸ்க் வழங்கிய ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்க தொகை: கணக்கெடுக்கும் பணி தீவிரம்

வேலூர்: கொரோனா அதிகரித்த காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கிய ஊரகப்பகுதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்க தொகை வழங்க கணக்கெடுப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு தலா இரு முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் அரசின் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் ஊரக பகுதிகளில் உள்ள ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சுய உதவி குழுக்கள், இதர கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முகக்கவசம் விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக அவர்களுக்கு ஒரு ரேஷன் கார்டுக்கு தலா 50 பைசா வீதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கான கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி இன்னும் ஓரிரு நாட்களில் முடியும்.அதன் பிறகு  ஊக்க தொகை கணக்கிடப்பட்டு, பணியாளர்களின் சம்பள கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

Related Stories: