மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு-கேரளா எல்லைப்பகுதியால் தொடர்ந்து குளிக்க அனுமதி மறுப்பு

தென்காசி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழும் நிலையில் கேரள மாநில எல்லைப்பகுதியாக இருப்பதால் நோய் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.  குற்றாலம் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் ஆகும். கொரோனா தொற்று காலம் துவங்கியது முதல் சீசன் சமயங்களில் இரண்டு ஆண்டுகளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்த போதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை. குற்றாலத்தை சேர்ந்த வர்த்தக சங்கங்களும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். சில அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்‌. தேர்தலிலும் இதே கருத்தை மையப்படுத்தியே பிரசாரம் இருந்தது. காசிமேஜர்புரம் ஊராட்சியில் அருவியில் குளிக்க அனுமதிக்கவில்லை எனில் தேர்தலை புறக்கணிப்போம் என்று ஒரு பகுதியில் தட்டி போடும் வைத்தனர்.

குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு அருவிகளை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டது. மேலும் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து குறிக்கும் வகையில் சமூக இடைவெளி குறியீடும் இடப்பட்டது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கலெக்டர் கோபால சுந்தரராஜ், ‘குற்றால அருவியில் குளிக்க அனுமதிப்பது தொடர்பாக நிலையான வழிகாட்டுதல்கள் எதுவும் வரவில்லை’ என்று தெரிவித்தார்.

ஆனால் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் வெளியூர்களிலிருந்து சுற்றுலாபயணிகள் தென்காசி மற்றும் குற்றால பகுதிகளை சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தொடர்ந்து ஆர்வத்துடன் விசாரித்த வண்ணம் உள்ளனர். திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கலெக்டரை சந்தித்து அருவியில் குளிக்க அனுமதிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கிடையே குளிக்க அனுமதி தொடர்ந்து மறுக்கப்படுவதற்கான காரணம் வெளியாகி உள்ளது.

அதாவது தென்காசி மாவட்டம் கேரள மாநிலத்தின் எல்லைப்பகுதியாக இருப்பதால் சுகாதாரத்துறையினர் சற்று தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. அருவிகளில் குளிக்க அனுமதிக்கும் போது தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பிரிக்க முடியாத சூழல் ஏற்படும். அருவிகளில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாக குளிக்கும் பொழுது கொரோனா பரவல் மட்டுமின்றி நிபா வைரஸ், ஜிகா வைரஸ் பறவை காய்ச்சல் உள்ளிட்டவையும் பரவுவதற்கு காரணியாக அமைந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. பொதுவாகவே மழைக்காலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையிலும், கேரளாவில் சில வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் நிலையிலும் அருவியில் குளியலுக்கு அனுமதி கொடுத்தால் அவை வைரஸ் நோய்கள் பரவுவதற்கு காரணமாக அமைந்துவிடும் என்று சுகாதாரத் துறை வல்லுநர்கள் தயங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: