ஆயுதபூஜை கொண்டாட்டத்துக்கு அனுப்ப பூலாம்பட்டி சுற்றுவட்டாரத்தில் செங்கரும்பு அறுவடை துவக்கம்-பெங்களூரு வியாபாரிகள் நேரடி கொள்முதல்

இடைப்பாடி : ஆயுதபூஜை கொண்டாட்டத்துக்காக பெங்களுருவுக்கு அனுப்ப, இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் செங்கரும்பு அறுவடை பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.சேலம் மாவட்டம், இடைப்பாடி சுற்றுவட்டார பகுதியில் பூலாம்பட்டி, ஓடக்காடு, காட்டுவளவு, மூலப்பாறை, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, அண்ணமார் கோயில், செட்டிப்பட்டி, கொள்ளம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 400க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு ஆயுதபூஜை கொண்டாட்டத்துக்காக செங்கரும்பு அனுப்பப்படுகிறது. வாகனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களில் ஆயுதபூஜை கொண்டாடும் போது, முகப்பில் கட்டுவதற்காக செங்கரும்பு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் பெங்களூரு, ஓசூர் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் இடைப்பாடி பகுதியில் முகாமிட்டு செங்கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம். அதன்படி வரும் 14 மற்றும் 15ம்தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் செங்கரும்பு அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. இங்கு முகாமிட்டுள்ள பெங்களூரு வியாபாரிகள் கரும்பு ஒன்றை ₹10 முதல் ₹15க்கு மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். தவிர, பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன், சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கும் கரும்பு விற்பனைக்கு அனுப்பப்படும். கரும்பு விலையும் உயரக்கூடும் என விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று பூலாம்பட்டி பகுதியில் பெங்களூரு வியாபாரிகளுக்கு அனுப்ப, கரும்பு அறுவடை பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

Related Stories: