தண்டவாளத்தில் மண்சரிந்து பாறை விழுந்தது 180 பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் பாதியில் நிறுத்தம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு 180 சுற்றுலாப்பயணிகளோடு மலை ரயில் ஊட்டி புறப்பட்டு சென்றது. கல்லார் ரயில் நிலையத்தில் தேவையான தண்ணீர்  நிரப்பிவிட்டு மீண்டும் புறப்பட்டது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டு இருந்தது. ராட்சத பாறையும் விழுந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தினார். ரயிலை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தகவல் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கல்லார் ரயில் நிலையத்திற்கு ரயில் திரும்பி வந்தது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் உத்தரவின்பேரில் மீண்டும் மலை ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திரும்பி வந்தது. அங்கு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் அரசு பஸ்கள் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் ரயில்வே பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சீரமைப்பு பணி முடியும் வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2  நாட்களுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டு சீரமைப்பு பணி நடந்தது. நேற்று மலை ரயில் இயக்கப்பட்ட நிலையில் மீண்டும் மண்சரிவு காரணமாக மலை ரயில் ரத்து செய்யப்பட்டது சுற்றுலாப் பயணிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: