‘பாம் போடுவோம், தடைகளை உடைப்போம்’ தேர்தல் நடத்தும் அலுவலரை மிரட்டிய அதிமுக வேட்பாளர்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகளுக்கு கடந்த 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளியில் 2 அறைகளில் வைத்து 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்திற்கு ஏஜென்டுகள் நியமிக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இதில் அதிமுக மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் வழக்கறிஞர் உதயகுமார் மற்றும் கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் வாக்கு எண்ணும்போது ஒரு மேஜைக்கு 2 பேர் வீதம் 3 அறைகளுக்கு 18 பேர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் உள்பட 19 பேரை அனுமதிக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் ஒரு அறைக்கு 2 பேர் வீதம் 6 பேரும், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளரையும் சேர்த்து 7 பேரை அனுமதிப்பதாக கூறியுள்ளார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அதிமுக வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் இம்முறை வாக்கு எண்ணிக்கை சரியாக நடக்காது என்றும், சந்தேகம் உள்ளதாகவும் கூறி வாக்கு எண்ணும் மையத்தில் பாம் போடுவோம் என்றும், வாக்கு எண்ணும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தகரத்தால் ஆன சீட்டுகளை உடைத்து விடுவோம் என்றும் புதுச்சேரி கலாச்சாரத்தை இங்கே கொண்டு வராதீர்கள் என்றும் கடுமையாக மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார், போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் உதயகுமார் மற்றும் ஆதரவாளர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, அரசு அலுவலர் பணியை செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: