ஊட்டியில் ஐடி, டைடல் பார்க் அமைக்கும் நடவடிக்கை தொடக்கம்: எச்பிஎப் பகுதியில் வனத்துறை அமைச்சர் ஆய்வு

ஊட்டி: ஊட்டியில் ஐடி பார்க் மற்றும் டைடல் பார்க் அமைப்பது தொடர்பான ஆய்வு வனத்துறை அமைச்சர் தலைமையில் நடந்தது. தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதேபோல், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய தொழில் தொடங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டம் தோறும் ஐடி பார்க் மற்றும் டைடல் பார்க் அமைக்க தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திலும், இது போன்ற புதிய தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் டைடல் பார்க் மற்றும் ஐடி பார்க் அமைப்பது தொடர்பான ஆய்வு நேற்று நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஊட்டி அருகேயுள்ள எச்பிஎப்., பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

எச்பிஎப் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ள இடம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். தமிழகத்தில் படித்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டம் தோறும் ஐடி பார்க்குகள் மற்றும் டைடல் பார்க்குகள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இத்திட்டங்களை முறையாக மேற்கொள்வதற்காக, சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து, தொழிற்துறை அமைச்சர் நீலகிரி மாவட்டத்தில் ஐடி மற்றும் டைடல் பார்க் அமைக்க இடம் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதன் விவரத்தினை தெரிவிக்க என்னிடம் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, நான் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அதிகாரிகள் ஊட்டியில் உள்ள எச்பிஎப் தொழிற்சாலை வளாகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் உள்ள நிலங்களை ஆய்வு செய்தோம்.

இந்த நிலம் காலியாக உள்ளது. இது மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த நிலத்தை மாநில அரசு பெறுவது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த எச்பிஎப் தொழிற்சாலையில் 4 ஆயிரம் பேர் பணியாற்றி வந்தனர். அதேபோன்று இப்பகுதியில் ஏதேனும் தொழிற்சாலை அமைத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: