புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி-கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கஉள்ளதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை ஆர்டிஓ அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் சார்பில் நடைபெற்ற செயல் விளக்க மாதிரி ஒத்திகைப் பயிற்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிகர் தெரிவித்ததாவது;புதுக்கோட்டை மாவட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாருதல், மழைநீர் வரத்து வாய்க்கால் தூர்வாருதல், பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள் போன்றவை இன்றைய தினம் ஆய்வு செய்யப்படுகிறது. இதேபோன்று வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் இப்பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மூலம் புதுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் ஒத்திகை பயிற்சியும் பார்வையிடப்பட்டது. இதன் பயனாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும். தமிழகத்தில் 99 சதவீதம் அங்கன்வாடி மையங்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்பட்டு வருவதுடன், இதில் 98 சதவீதம் குழந்தைகள் வருகை தருகிறார்கள். அனைத்து சத்துணவு அமைப்புகள் நவம்பர் 1ம் தேதி முதல் துவங்கப்பட்டு, சத்தான உணவுகள் வழங்கப்படவுள்ளது. முதல்வர் உத்தரவுபடி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் அங்கன்வாடி மையங்கள் கட்டப்படவுள்ளது என்றார்.

பின்னர் புதுக்கோட்டை நகராட்சி, காமராஜபுரம் 10ம் வீதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுவதை ஆய்வு செய்தார்.

மேலும் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் பணிகள் நடைபெற்று வரும் புதுக்கோட்டை நகராட்சி, காமராஜபுரம் 19ம் வீதியில் மழைநீர் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி, புதுக்குளம் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி, கூடல்நகர் சந்திரமுகி வாய்க்கால் தூர்வாரும் பணி மற்றும் புதுக்கோட்டை வட்டம், ஏ.மாத்தூர் நேரடி நெல்கொள்முதல் நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் புதுக்கோட்டை நகர்மன்ற கட்டிடத்தில் நடைபெற்று வரும் கோவிட் -19 தடுப்பூசி முகாமையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது டிஆர்ஓ சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ரேணுகா, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, ஆர்டிஓ அபிநயா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா, நகராட்சி ஆணையர் நாகராஜன், தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: